பித்தன்


‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.

அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.

அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.

நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.
நான் காயப்பட்டேன்.

நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.

ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.

அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.

திரைகள் விலகின.

எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.

முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.

காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.

உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.

அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.

அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.

நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.

அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.

ஏன்?என்றேன்.

அவர்கள்
வெளிப்படுவதற்கு
பயப்படுகிறார்கள்.

அவர்கள்
வேடங்களில்
வசிக்கிறார்கள்.

அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.

வேடம் கலைந்தால்
மேடை போய்விடும்.

நான் அவர்களுடைய
அம்பலம்.

கவனி!
அம்பலம்
என் மேடையல்ல.
நடனம்.

அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள் என்றான்.

நான் உடைந்தேன்.

காலம் காலமாய்த்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.

(கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதைத் தொகுப்பிலிருந்து)
நன்றி: http://kavikko.wordpress.com/2010/02/18/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/